Saturday, March 22, 2014

நாட்டுப்புற மருத்துவம் (Folk medicine)

முனைவர் சோ. குமரேசமூர்த்தி - 15 SEPTEMBER, 2005
Folk medicine - Tamil Katturaikal - General Articles
நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியவர்கள் இம் மண்ணுக்குச் சொந்தமான பாமர மக்களே ஆவர். வளர்த்து வாழ்வித்து வந்த இப்பாடல்களை இன்று படிப்பாளிகளும் இலக்கியக் கர்த்தாக்களும் தங்கள் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் பயன்படுத்தி உயர்வடைகின்றனர்.
மனிதன் நடமாடத்தொடங்கிய காலம் முதல் இந்தப் பாடல்கள் பிறந்து வளர்ந்து வருகின்றன. இப்பாடல்களை இயற்கைப்பாடல்கள் எனக் கூறலாம். நாட்டுப்புறப் பாடல்கள் எளியவை இனியவை, ஏன் தோன்றின எவரால் பிறந்தன என்று சொல்ல முடியாத பண்பு கொண்டன. கிராமப்புற மக்களின் அன்றாட உள்ளுணர்வின் பிரதிபலிப்பாக விளக்கும் இப்பாடல்கள் காடுகளிலும், வயல்களிலும் தொழில் செய்யும் இடங்களிலும் பிறக்கின்றன. இதன் வாழ்க்கையானது தாலாட்டில் தொடங்கி (அரும்பாகி) காதலில் வளர்ந்து (போதாகி) திருமணத்தில் நிறைவெய்தி (மலர்ந்து, மணம்வீசி) மரணத்தில் முடிவடைகிறது (உதிர்கின்றது). நாட்டு நடப்பினைத் தீட்டிக் காட்டும் பாட்டிலக்கியம் என்று சுருக்கமாகக் கூறலாம்.
மனித மனத்தின் இன்ப எழுச்சியையும், துன்ப சோகங்களையும், வாழ்க்கைப் போராட்டங்களையும், நாட்டுப்புறப் பாடல்களில் காணலாம், நாட்டு மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கம், மருத்துவம் போன்றவற்றை வெளிக்கொணர்வன இந்நாட்டுப்புறப் பாடல்கள் என்பது திண்ணம்.
நாட்டுப்புற பாடல்களில் மக்கள் பின்பற்றி வந்துள்ள மருத்துவச் செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
நாட்டுப்புற மருத்துவம்:-
மனித சமுதாயம் தனக்கென ஒரு மருத்துவ அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. அதனைச் சமூக நிறுவனம் என்றே கூறலாம். நோயும், மருத்துவமும் மனித இனப்பண்பாடு வரலாற்றில் பிரிக்க முடியாதன. நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் என்பர். இவை "Folk medicine, Ethno medicine, Popular medicine, Popular health culture ethnoiatry" Ethnoiatils எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
தமிழக கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியம் கை மருத்துவம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம், என்றெல்லாம் கூறுவர். மிகப்பழமையான மருத்துவ முறை என்று ஆயர்வேத மருத்துவ முறையைக் குறிப்பிடுவர். நாட்டுப்புற மருத்துவம் வேத காலத்திலேயே (அதர்வண வேதத்தில்) நடைமுறையில் இருந்தது. அறிவியல் வளர்ந்த இக்காலத்திலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தி வருகிறது எனலாம்.
நாட்டுப்புறப் பாடல்களில் பல அரிய மருத்துவ முறைகள் பாலில் வெண்ணெய் போல் அடங்கி உள்ளன. இதனை மருத்துவப் புலமை என்னும் மத்தினால் கடைந்தால் வெண்ணெய் திரள்வதை போல் பிணி தீர்க்கும் மருந்து முறைகள் வெளிப்படுகின்றன.
நாட்டுப்புற மருத்துவத்தின் வகைகள்:-
1. மந்திர சமய மருத்துவம்
2. இயற்கை மருத்துவம்

1. மந்திர சமய மருத்துவம்:-
மனித இன வரலாற்றை நோக்கின் நோய்கள் ஏற்பட சில காரணங்கள் இருந்தன என தொடக்க காலத்தில் மனிதன் நினைத்தான். காணிக்காரன் போன்ற பழங்குடி சமுதாயத்தில் பிலாத்தி என்பவனே பூசாரியாகவும், மந்திரவாதியாகவும், வைத்தியனாகவும் இருந்து வந்துள்ளான். அவனுக்கு அச்சமுதாயத்தில் மிக்க மதிப்பு உண்டு. இன்றும் நோயினைத் தீர்ப்பதற்கு மருத்துவரை நாடுவதற்குப் பதிலாக பூசாரியையும், மந்திரவாதியையும் நாடுவதை பழங்குடிச் சமுதாயத்திலும், நாட்டுப்புறச் சமுதாயத்திலும் காணலாம். ஆவியுலகக் கோட்பாட்டின் அடிப்படையில் மந்திரங்கள் தோன்றின.
மனிதனுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் ஒன்று உலகை கட்டுப்படுத்துகிறது. அவ்வாற்றலை வழிபாட்டின் மூலமும், பலியிடுதல் மூலமும், ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கை அடிப்படையிலமைந்த செயல்பாடு கொண்ட அமைப்பைச் சமயம் என்கிறோம். பாவனைச் செயல்களையும், கட்டளையிடுதலையும் அடிப்படையாகக் கொண்டது மந்திரம் என்றும் வரையறுக்கலாம். மந்திரம் சமயத்துடன் இணைந்து சில அடுக்கு வடிவில் தோற்றமளித்தது. இதனை மந்திரச் சடங்குகள் என்பர்.
காணிக்கார பழங்குடிகளிடையே மந்திரச் சடங்குகளில் கண்ணேறு கழித்தல், இருள் அடித்தவர்களுக்கு தாயத்து மந்திரித்துக் கட்டுதல், பெண் கர்ப்பமாயிருக்கும் போது, பிறக்கும் குழந்தையின் நலன் வேண்டி, கோழி பலியிடுவது, பல்வலி, காய்ச்சல், தலவலி, வயிற்றுவலி, நாய்க்கடி, பாம்புகடி, முதலியவற்றை மந்திரம் மூலம் குணப்படுத்த முயல்கின்றனர். மந்திரத்தின் மூலம் நோய் குணமாகும் என நம்புகின்றனர்.
அம்மை நோய் மாரியம்மனின் சினத்தால் உண்டாவதாக மக்கள் நம்புகின்றனர். நகர்ப்புறங்களில் உள்ள மக்கள்கூட மாரியம்மனின் சிற்றம் என்று கருதி இன்றும் மருத்துவமனை போவதில்லை. சிற்றம் தணிய அக்கினிச்சட்டி எடுப்பதாக நேர்த்திக்கடன் நேர்ந்து விடுகின்றனர். அக்க உரு போன்ற நோய்களுக்கு முதுகில் செம்மண்ணால் நாய், சிங்கம் போன்ற உருவத்தை வரைவர். இதுவும் மந்திர சமய மருத்துவத்தின் பாற்படும்.
உடலில் உள்ள கட்டியைக் குணப்படுத்த கத்திப் பார்வை பார்த்தல் என்ற சிகிச்சை முறை திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. வைத்தியர் கட்டிக்கு நேராகக் கத்தியை வைத்துக் கீறுவது போன்ற பாவனை செய்து சில மந்திரங்களை முணுமுணுப்பார். கட்டி உடைந்துவிடும் என நம்புகின்றனர். இத்தகைய முறைகளைக் கையாளுவதுடன், மூலிகைகளையும் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டுப்புற இயற்கை மருத்துவம்:-
மூலிகை, தாது போன்ற பொருட்களால் ஆன மருந்துகள் முதலியவற்றை இயற்கை, நாட்டுப்புற மருத்துவம் என்பர். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உட்கொள்ளும் மருந்து, வெளிப்பூச்சி மருந்து என இருவகையைக் கையாளுகின்றனர். இயற்கை நாட்டுப்புற மருத்துவம் மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே தொடர்ந்து வந்துள்ளது. பண்டைய மனிதனின் மருத்துவ அறிவை நம்பிக்கையை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மஞ்சள் காமாலை நோய்:-
1. கீழாநெல்லி, மஞ்சள், கரிசலாங்கண்ணியை அரைத்து மோரில் கலந்து ஒன்பது நாள் சாப்பிடவேண்டும். உப்பில்லாத உணவை சாப்பிட வேண்டும்.
2. கரிசலாங்கண்ணி இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து நான்கு நாள் சாப்பிடவேண்டும். உப்பு, புளி நீக்க வேண்டும்.
3. அதிமதுரம், சங்கமவேர், கீழாநெல்லி ஆகியவற்றை எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துக், காயவைத்து மாத்திரைகளாக்கிச் சாப்பிட வேண்டும்.
நெஞ்சுவலி:-
மான்கொம்பு, வெண்கடுகு, பெருங்காயம் முதலியவற்றோடு சேர்த்து அரைத்து மார்பில் பூச வலி குறையும்.
மண்டைவலி:-
மாதுளம் பூ லேகியம், சுக்கு முதலியவற்றைச் சேர்த்து அரைத்து உண்ணவும்.
தொண்டைவலி:-
தூதுளம் பூ லேகியம் சாப்பிட குணமாகும்.
பல்வலி:-
1. நாயுருவியால் பல் துலக்கவும்.
2. கருவப்பட்டைத்தூள், படிகாரபஸ்பம், கல்நார்பஸ்பம் முதலியவற்றைச் சேர்த்துப் பல்துலக்கி வந்தால் பல்லசைவு, பல்வலி, பல்லில் இரத்தம் ஒழுகுதல் முதலியவற்றைக் குணப்படுத்தும்.
வயிற்றுவலி:-
சுக்குப் பொடி ஒரு சிட்டிகை, சிலாத்து பற்பம் சேர்த்து சுடு தண்ணீரில் சாப்பிடவும்.
கண்வலி:-
வேகவைத்த பருப்பையும், தேங்காய் தூவலையும் உண்டு வந்தால் கண்வலி நீங்கும்.
மார்வலி:-
தாமரைப்பூ, ரோஜாமொட்டு, பூமிசக்கரைக்கிழங்கு, கோரைக்கிழங்கு, செம்பரத்தம்பூ, கொத்தமல்லி, அரைக்கீரை விதை இவைகளை சம அளவு எடை எடுத்து அரைப்படி தண்ணீரில் வற்றக் காய்ச்சி பால், மிளகுத்தூள், சித்தரத்தை இவற்றோடு கோழி முட்டை வெள்ளைக் கரு கலந்து காலை மாலை கொடுக்கவும். பத்தியம் காரசாரம் நீக்கவும்.
மூட்டுவலி:-
சதக்குப்பி மூலிகையைப் பயன்படுத்தவும். (வெளி உபயோகம்)
இடுப்பு வலி:-
செந்தட்டிவேரை அரைத்துப் பூச, இடுப்புவலி நீங்கும்.
வயிற்றுப்பூச்சி:-
1. வேப்ப இலைக் கொழுந்துடன் சிறிது வெல்லம் கலந்து கொடுக்கவும்.
2. துளசியையும், மிளகையும் சேர்த்துக் காய்ச்சி குடிக்கவும்.
வயிற்றுப்போக்கு:-
மாதுளம்பிஞ்சு, தென்னம் பிஞ்சு, மாவிலைக் கொழுந்து இம்மூன்றையும் அரைத்துக் கொடுக்கவும்.
வயிற்று உப்புசம்:-
சிரகமும் வெல்லமும் கலந்து சாப்பிடவும்.
ஆஸ்த்மா:-
1. முசுமுசுக்கை இலையைப் பறித்து மிளகைக் கலந்து சாப்பிடவும்.
2. ஆடாதொடை இலையுடன் மிளகு, திப்பிலி சேர்த்துக் கசாயம் செய்து உண்ணலாம். இத்துடன் நஞ்சறுப்பான் மூலிகையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மூச்சடைப்பு:-
பூமிசக்கரைக் கீழங்கு இடித்துத் தேனில் கலந்து சாப்பிடவும்.
காது குத்தல்:-
1. வெள்ளைப் பூண்டை வேகவைத்து அதன் சாற்றைக் காதில் விடவும்.
2. ஒதிய இலை, ஆமணக்கு இலை, முருங்கை இலை, முள்ளங்கி இலை அடுப்பில் காயவைத்து அதன் சாற்றைக் காதில் விடவும்.
காதிரைச்சல்:-
மொசுமொசுக்கைத் தைலத்தைக் காதில் விடவும்.
காது வலி:-
சவுரிப்பழம் உண்ண வலி நீங்கும்.
சளி:-
துளசிச் சாறு கொடுக்கவும் அல்லது மொசுமொசுக்கை இலை, பச்சரிசி இரண்டையும் அரைத்து அடைபோல் தட்டி (தோசைக் கல்லில்) நெய்விட்டுச் சாப்பிடவும்.
காக்கா வலிப்பு:-
தும்பை இலையைக் கசக்கி மூக்கில் பத்து துளிவிட உடன் வலி நிற்கும்.
பித்தம்:-
வேலம்பட்டையை அரைத்துக் கொடுக்கவும்.
சிதபேதி:-
மாதுளம் பிஞ்சு அரைத்துப் பாலில் கொடுக்கவும்.
மார்புச்சளி:-
மொசுமொசுக்கை இலையை அரைத்துக் கொடுக்கவும்.
நாக்குப்பூச்சி:-
குப்பைமேனி வேரை நசுக்கி நன்கு காய்ச்சிக் குடிக்கவும்.
கபம்:-
துளசிச் சாற்றைக் குடிக்கவும்.
கொடிய விஜூரம்:-
நொச்சி இலைச்சாற்றை உண்ணவும்.
விஷக்கடி:-
சிமையகத்தியைக் கொடுக்கக் குணமாகும்.
நாய்கடி:-
எருக்கம் வேரை சுட்டுச் சாம்பலாக்கித் தேனில் கலந்து ஆறுநாள் பூச நாய்கடி விஷம் தீரும்.
தேள்கடி:-
மூட்டுக்குக் கீழே கயிற்றால் கட்டுப் போடவேண்டும். கொட்டிய இடத்தில் வெங்காயத் துண்டுகளைத் தேய்க்க வேண்டும். நாயுருவி வேரைப் பச்சையாக மெல்ல, அதன் விஷம் நீங்கும்.
நட்டுவாக்காலி கடி:-
தேங்காய்ப் பாலை பருகச் செய்யவேண்டும்.
பித்த வெடிப்பு:-
மாசிக் காயை அரைத்துப் பூசவும்.
சிறுநீரில் எரிச்சல்:-
நெருஞ்சி முள்ளை நீரில் ஊற வைத்து இறுத்துச் சர்க்கரை சேர்த்துப் பருக எரிச்சல் நீங்கும்.
கக்குவான்:-
கண்டங்கத்திரி வேரைப் பசுவின் பாலில் காய்ச்சிக் கொடுக்கக் குணமாகும்.
முறை சுரம், குளிர்க்காய்ச்சல்:-
அதிமதுரத்தைப் பயன்படுத்தவும்.
நீரிழிவு:-
அத்திப் பழச்சாறு கொடுக்கலாம்.
கண்கட்டி:-
திருநீற்றுப் பச்சிலைச் சாற்றில் சங்கை நன்றாக உரைத்துப் பூசவும்.
மண்ணீரல் நோய்:-
சிந்தில் கொடியைப் பயன்படுத்தவும்.
தாதுவிருத்தி:-
பாதாம்பருப்பை நீரில் நனையவைத்துத் தோலை நீக்கிப் பாலில் கலந்து ஒரு மண்டலம் (48 நாள்) உண்ணவும்.
உடல் சூடு:-
பொன்னாங்கண்ணியைப் பூண்டுடன் சமைத்துச் சாப்பிடவும்.
குடல் புண்:-
வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று தின்றால் இந்நோய் நீங்கும்.
சூதகவியாதி:-
துளசியை மென்று தின்றால் இந்நோய் நீங்கும்.
ஜலதோஷம்:-
வெங்காயம் தின்று சுடுநீர் பருகவும். பூண்டு அரைத்துச் சாப்பிடவும்.
நாட்டுப்புற மக்கள் நாட்டுப்புற மருத்துவத்தைப் பற்றிச் சில நம்பிக்கைகள் வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை அவர்களது வாழ்வோடு வாழ்வாகப் பின்னிப் பிணைந்தவை. பழமை என்று அவற்றை ஒதுக்கக் கூடாது. இன்று மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு நாட்டுப்புற மருத்துவம் பற்றி அறிவியல் முறையில் பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்வது நம் கடமையாகும்.

No comments:

Post a Comment