Saturday, March 22, 2014

நாட்டுப்புற மருத்துவம்


 
மனித இனம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு நோய்களையும் அதற்கான மருந்துகளையும் கண்டறிந்து வந்துள்ளது. இத்தகைய கண்டுபிடிப்புகள் மக்களிடையே பரவலாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.  இவற்றை நூலாகப் பதிந்து வைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வந்துள்ளன.  மருந்தியல் பற்றிய நூல்களை முதன் முதலில் உலகுக்கு வழங்கிய பெருமை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உரியது என்றும் கி.மு. 2500ஆம் ஆண்டில் சரகர் என்னும் மருத்துவர் தாவரங்களிலிருந்து பெறப்படும் முந்நூறு மருந்துகளைப் பற்றிக் குறிப்பெழுதியுள்ளார் என்றும் சொல்லப்படுகின்றது.
 
காலப்போக்கில் ஆயுர்வேதம்,  சித்த மருத்துவம்,  இயற்கை மருத்துவம் போன்ற பல மருத்துவ முறைகள் வளர்ந்தன.  இன்றைய நவீன மருத்துவம் என்பது கி.மு.  460இல் வாழ்ந்த கிரேக்க நாட்டு மருத்துவர் ஹிப்போகிரடிஸ் காலத்திலிருந்து தொடங்கியதாகவும் அது கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் சோதனைகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக வளர்ச்சி பெற்றது என்றும் கருதப்படுகின்றது    (மருந்தியல்    மு. துளசிமணி,  ச. ஆதித்தன்,  1985,  ப.  3).  இத்தகைய அறிவியல் அடிப்படைகள் உணரப்படாமலும் சொல்லப்படாமலும் சில குறிப்பிட்ட சாதியினராலோ,  மரபுவழி மருத்துவராலோ, பூசாரிகளாலோ, பொது மக்களுள் யாரேனும் ஒருவராலோ பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வரும் மருத்துவ முறையை நாம் நாட்டுப்புற மருத்துவம் என்று குறிப்பிடுகிறோம்.
 
நாட்டுப்புற மருத்துவம் உருவான வரலாறு
 
நாட்டுப்புற மருத்துவம் உருவான வரலாறு குறித்து ந. சந்திரன் (2002, பக். 14-16) கூறும் கருத்துகளைக் காண்போம். தொல்பழங்கால மனிதன் விலங்குகளின் தாக்குதல்களினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் எதிர்பாரா நோயினாலும் ஏற்பட்ட துயரங்களைப் போக்கிக்கொள்ள வழி தேடினான்.  தனித்தனியாய் வாழ்ந்த மனிதன் கூடிவாழத் தலைப்பட்டபோது ‘சமுதாயம்’  எனும் கூட்டமைப்புத் தோன்றியது. நிலையான இருப்பிடம்,  நிலையான தொழில் ஆகியவை தோன்றினாற் போல நிலையான உறவும் தோன்றியது.  அதனால் பலருடைய அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கின்ற வாய்ப்பு, கூட்டமைப்புச் சமுதாய உறுப்பினருக்கும் கிட்டியது.  அத்தகைய அறிவும் அனுபவமும் நோய் தீர்க்கும் முயற்சிக்குப் பெரிதும் துணை செய்தன.
 
இயற்கையோடு தொடர்பு கொண்டிருந்த மனிதன் தன்னைச் சுற்றி வளர்ந்துள்ள மரம், கிளை, இலை, வேர், செடி, கொடி, பூ, காய், கனி, விதை ஆகியவற்றையும் கூர்ந்து நோக்கினான். இதனால் அவற்றின் மருத்துவக் குணங்களும் அவனுக்குப் புலனாகத் தொடங்கின.  ஆங்காங்குக் கிடைக்கக்கூடிய தாவர வகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து அவற்றை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டபோது நாட்டு வைத்தியத்தின் மீதும் வைத்தியர்கள் மீதும் மனிதர்களுக்கு நம்பகத் தன்மை உண்டானது. நோயுற்ற மனிதன் மருத்துவனை நம்புவதும், மருத்துவன் மருந்தை நம்புவதும் காலத்தின் தேவையாகியது.  இந்நிலையில்,  நாட்டு வைத்தியர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர்.  இம்மதிப்பைக் காத்துக்கொள்ள அவர்கள் தமக்குத் தெரிந்த மருத்துவத்தில் மேலும் விளக்கம் தேட முற்பட்டனர். இத்தேடல் முயற்சி அவர்களுக்கு இத்துறையில் அனுபவ முதிர்ச்சியைத் தந்தது.  இப்பெரியோர்களின் அனுபவக் கொடையே நாட்டு மருத்துவமாகும்(ந. சந்திரன், பக். 14-16).
 
பல காலம் பலர் முயன்று கிடைத்த வெற்றிகளின் பயனாக ‘இதற்கு இது மருந்து’  என்ற தெளிவு பிறந்தது.  மனிதன் தன் நோய்களுக்கு மட்டுமன்றித் தன் வளர்ப்பு விலங்குகளின் நோய்களுக்கும் மருத்துவம் பார்த்தான். மாமிச உணவுப் பழக்கம் காரணமாக விலங்குகளின் உள்ளுறுப்புகளைக் கூர்ந்து கவனித்த அனுபவம் அவனது மருத்துவ அறிவு வரை உதவியது.  இவ்வாறு நாட்டு மருத்துவம் மேலும் வளர்ந்தது.
 
நாட்டுப்புற மருத்துவத்தின் பல்வேறு பெயர்கள்
 
நாட்டுப்புற மருத்துவமானது நாட்டு மருத்துவம்,  கை வைத்தியம்,  பாட்டி வைத்தியம்,  வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், மூலிகை வைத்தியம், இராஜ வைத்தியம், இரகசிய மருந்து வைத்தியம் என மக்களால் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயர்கள் மருத்துவப் பொருள்கள் அடிப்படையிலும் மருத்துவம் செய்கின்ற ஆள் அடிப்படையிலும் அமைந்துள்ளன.
 
நாட்டுப்புற மருத்துவம் குறித்த விளக்கம்
 
நாட்டுப்புற மருத்துவம் குறித்து அக்கறை கொண்ட மேனாட்டு, நம்நாட்டு அறிஞர்கள் அவற்றைக் குறித்து விளக்கங்கள் பல கூறினர். இவர்களது இந்த விளக்கங்கள் நாட்டுப்புற மருத்துவத்தை வரையறை செய்ய முயன்றதன் விளைவு எனக் கூறலாம்.
 
‘‘தலைமுறை தலைமுறையாகத் தெரிந்துகொண்ட அனுபவத்தின் உதவியோடு எளிய முறைகளில் வீட்டிலேயே நோய்களைப் போக்கிக்கொள்ளும் மருத்துவ முறையே நாட்டுப்புற மருத்துவம்’’  என்கிறது ஸ்டெட்மேன் மருத்துவ அகராதி (Stedman’s Medical Dictionary).
 
டான் யாடர் என்னும் அமெரிக்க அறிஞர் நாட்டுப்புற மருத்துவத்தை ‘வீட்டுவைத்தியம்’(Home Remedies) எனக் குறிப்பிட்டார். மற்றொரு அமெரிக்க மருத்துவர் ஜார்விஸ் ‘இயற்கை மருந்து’ எனக் குறிப்பிட்டார். சு. சண்முகசுந்தரம், ந. சந்திரன் ஆகியோர் கூறும் விளக்கங்களையும் ஒப்புநோக்கினால் நாம் நாட்டுப்புற மருத்துவத்தைப் பின்வருமாறு விளக்கலாம்.  ‘ஒரு நாட்டின் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு அந்தந்த நாட்டில் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு மக்கள் தம் பட்டறிவால் செய்துவரும் மருத்துவ முறையே நாட்டுப்புற மருத்துவம் ஆகும்’.
 
Reference: http://goo.gl/IaGULY

நாட்டுப்புற மருத்துவத்தின் வகைகள்
 
நாட்டுப்புற ஆய்வாளர்கள் பலர் நாட்டுப்புற மருத்துவ வகைகளை அவரவர் வாழும் நாட்டில் வழங்கும் சூழல்களுக்கேற்பப் பலவாறு பகுத்துக் காண்பர்.  டான் யாடர்(Don  Yoder)  நாட்டுப்புற மருத்துவத்தைப் பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்.
 
1. மந்திர சமய மருத்துவம்(Magico Religious Medicine)
 
அ. கடவுளின் சீற்றத்தால் ஏற்படும் நோய்கள்
ஆ. கெட்ட ஆவிகளால்(Evil Spirit) ஏற்படும் நோய்கள்
இ.  சூன்யம்(Witch Craft) முதலியவற்றால் ஏற்படும் நோய்கள்
ஈ.   கண்ணேறு படுவதால்(Evil Eye) ஏற்படும் நோய்கள்
உ.  விலக்குகளை மீறுவதால்(Break of Taboos) ஏற்படும் நோய்கள்
 
2. இயற்கை நாட்டுப்புற மருத்துவம்(Natural Folk Medicine)
 
அ. மனிதர்களுக்கான மருத்துவம்
ஆ. பிராணிகளுக்கான மருத்துவம்
 
மேற்காட்டிய பாகுபாட்டில் அடங்குமாறே தே. ஞானசேகரன்(மந்திரம் சடங்குகள் சமயம்), சு. சண்முகசுந்தரம்(நாட்டுப்புற இயல்) இவர்களின் வகைப்பாடுகளும் உள்ளன. அவை வருமாறு :
 
1. மருந்து முறை சார்ந்த ராஜ வைத்தியம்,
2. மந்திர முறை சார்ந்த பூத வைத்தியம்,
 
3. நெருப்பு முறை சார்ந்த ராட்சச வைத்தியம்     (தே. ஞானசேகரன்)
 
1. இயற்கை மருத்துவம்(வயிற்றுப்பூச்சிகள் அழிய வேப்பிலைக் கொழுந்தை அரைத்துச் சாப்பிடுதல் போன்றவை).
 
2. மத - மாந்திரீக மருத்துவம் (மந்திரித்தல், கண்ணேறு கழித்தல், சுற்றிப் போடுதல்).
 
3. நம்பிக்கை மருத்துவம்(எமனுக்குப் பயந்து காது குத்துவது, கை, கால் சுளுக்குகளுக்கு இரட்டையர் நீவுதல் போன்றவை).
 
4. திட்டமிட்ட மருத்துவம்(உண்ட உணவு, செரிக்க வெற்றிலை போடுதல் போன்றவை).
 
5. முரட்டு மருத்துவம்(நாய் கடித்தால் கடிபட்ட இடத்தைச் செருப்பால் அடித்தல்)
(சு. சண்முகசுந்தரம்)
 
ஆறு. இராமநாதன் நாட்டுப்புற மருத்துவத்தை அ. நம்பிக்கை மருத்துவம், ஆ. இயற்கை அல்லது மூலிகை மருத்துவம் என இரண்டாக வகைப்படுத்துகிறார்.
 
நாட்டுப்புற மக்கள் நோய் தோன்றுவதற்கான காரணங்கள் எனப் பின்வருவனவற்றை நம்புகின்றனர்.
 
1. தெய்வங்களின் கோபம்
2. பேயின் செயல்
3. வைப்பு / பில்லி சூனியம் / வசிய மருந்து
4. முற்பிறப்புப் பாவங்கள்
5. கண்ணேறு
6. உடலில் ஏற்படும் சூடு - குளிர்ச்சி
7. கவனக் குறைவு
 
இந்த நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே மருத்துவ முறைகள் அமைகின்றன.  முதல் ஐந்தும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமைவதால் அவற்றிற்கான மருத்துவமும் மந்திரச் சடங்குகள் வாயிலாகவே செய்யப்படுகின்றன.  எனவே இவற்றை நாம் ‘நம்பிக்கை மருத்துவம்’  எனச் சுட்டலாம்.  இத்தகைய நம்பிக்கை மருத்துவ முறைகள் உளவியல் தொடர்புடைய சில நோய்களைத் தீர்க்க உதவுகின்றன.
 
மேற்கூறப்பட்டவற்றுள் இறுதி இரண்டு (6, 7) காரணங்களால் தோன்றும் நோய்களைக் குணப்படுத்த மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன.   இத்தகைய மருத்துவத்தை ‘இயற்கை அல்லது மூலிகை மருத்துவம்’ என்று சுட்டலாம்.
 
நாட்டுப்புற மருத்துவம் குறித்து நாட்டுப்புறவியல் அறிஞர்கள் கூறும் மேலும் சில வகைப்பாடுகளைக் கீழே காணலாம். நாட்டுப்புற வழக்காறுகளின் அடிப்படையில் அமைந்த வகைகள் :
 
1. நாட்டுப்புறப் பாடல்கள் கூறும் மருந்து முறைகள்
2. நம்பிக்கைகள் கூறும் மருந்து முறைகள்
3. பழமொழிகள் கூறும் மருந்து முறைகள்
4. பழக்க வழக்கங்கள் கூறும் மருந்து முறைகள்
5. சிடுகா மருந்து முறைகள் 
(ஆய்வு நோக்கில் நாட்டுப்புற மருத்துவம், க. வேங்கடேசன்)
 
மருத்துவத்திற்கு உட்படுபவர்களின் அடிப்படையில் அமைந்தவை :
 
1. மகளிர் மருத்துவம்
2. ஆடவர் மருத்துவம்
3. குழந்தையர் மருத்துவம்
4. பொது மருத்துவம்
கால்நடை மருத்துவம் (ந. சந்திரன்)
 
இவற்றில் சிடுகா மருந்து என்பது ‘பாட்டி வைத்தியம்’,  ‘கைமுறை வைத்தியம்’,  ‘வீட்டு வைத்தியம்’ எனப் பல பெயர்களில் வழங்கப்படுகின்றது. இவற்றை ‘எழுதப்படாத மருந்தியல் முறைகள்’ எனலாம்.
 
நாட்டுப்புற மருந்துகள்
 
நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர்,  பெண்டிர்,  குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.
 
 மகளிர் மருத்துவம்
 
திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :
 
1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.
 
2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.
 
3. சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.
 
4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.
 
5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.
 
திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.
 
1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.
 
2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.
 
3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.
 
4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.
 
 ஆடவர் மருத்துவம்
 
ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :
 
1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.
 
2. மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.
 
3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.
 
4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.
 
5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.
 
 குழந்தையர் மருத்துவம்
 
அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.
 
1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.
 
2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.
 
3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.
 
4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.
 
5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.
 
 பொது மருத்துவம்
 
ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன.   அந்நோய்கள் பலவாகும்.   அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :
 
1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.
 
2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.
 
3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.
 
4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.
 
5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்.
 
 கால்நடை மருத்துவம்
 
கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.
 
1. புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.
 
2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.
 
3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்.

நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்
 
பக்க விளைவுகள் இல்லாதது.  எளிய முறையில் அமைவது.  அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது.  அனுபவ முறையில் பெறப்படுவது.  பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது.  சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது.  எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம்.   பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது.  உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது.  உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாக ஆகின்றது.
 
நாட்டுப்புற மருத்துவ ஆய்வுகள்
 
ஓ.பி. ஜாகி(O.P. Jaggi) என்பவர் 1973இல் நாட்டுப்புற மருத்துவம்(Folk Medicine) என்னும் நூலை எழுதியுள்ளார்.  இதில் இந்திய நாட்டுப்புற மருத்துவ முறைகள் பற்றிய விளக்கம் உள்ளது.  1956இல் ஆர்.என். சோப்ரா(R.N. Chopra) என்பவரும் மற்றும் சிலரும் சேர்ந்து ‘இந்திய மருத்துவச் செடிகளின் பட்டியல்’(Glossary of Indian Medicinal Plants) என்னும் நூலை எழுதியுள்ளனர். இதில் மூலிகைச் செடிகளின் பட்டியல் உள்ளது.  மேலும் பல்வேறு அறிஞர்கள் பல கட்டுரைகள் எழுதி அவை ஆங்காங்கே வெளியாகியுள்ளன.
 
தமிழில் நாட்டுப்புற மருத்துவம் பற்றி வெளிவந்த நூல்கள் குறைவு.  இவற்றில் டாக்டர். க. வேங்கடேசனின் ‘ஆய்வு நோக்கில் நாட்டுப்புற மருத்துவம்’(1976)  என்ற நூலும் டாக்டர் இ. முத்தையாவின் ‘நாட்டுப்புற மருத்துவ மந்திரச் சடங்குகள்’(1986)  என்ற நூலும் குறிப்பிடத்தக்கவை. முனைவர் ந. சந்திரன் ‘நாட்டு மருத்துவம்’(2002) என்னும் நூலை எழுதியுள்ளார்.
 
சி.எஸ். குணமுருகேச முதலியார் ‘குணபாடம்’(1936) என்னும் நூலில் நாட்டுப்புற மருத்துவ முறைகள் சிலவற்றை விளக்குகிறார்.  ஆ.ரா.  கண்ணப்பர் நாட்டு மூலிகைகளைப் பற்றி விரிவாக ‘நம் நாட்டு மூலிகைகள்’ என்ற நூலில் எழுதியுள்ளார். இவரைத் தொடர்ந்து ‘புற்று நோய் மூலிகைகள்’ என்ற நூலை இரா. குமாரசாமி என்பவர் எழுதியுள்ளார்.
 
பி. சுரேந்திரகுமார் ‘நாட்டுப்புறவியல் ஆய்வுக்கோவையில்’(1987)  தஞ்சை மாவட்ட நாட்டுப்புற மருத்துவம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதியுள்ளார்.  சோமலே அவர்கள் ‘தமிழ் நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்’(1974)  என்ற நூலில் ‘மந்திரமும் மருந்தும்’  என்ற தலைப்பில் மந்திர மருத்துவச் சடங்குகள் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார். 1985இல் ஆ. சிவசுப்பிரமணியன் ‘ஆராய்ச்சி’ இதழில் ‘பரதவர்களின் நாட்டார் மருத்துவம்’ பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். ஆறு. இராமநாதன் தமது ‘நாட்டுப்புற இயல் ஆய்வுகள்’(1997) நூலில் ‘நாட்டுப்புற மருத்துவம் நம்பிக்கைக்கு உகந்ததா?’ என்னும் கட்டுரையை எழுதியுள்ளார்.
 
இவை தவிரப் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு செய்த மாணவர்கள் பலர் தமது ஆய்வுத் தலைப்பாக நாட்டுப்புற மருத்துவக் கூறுகளை எடுத்துக்கொண்டு ஆய்வேடுகளை அளித்துள்ளனர்.

Reference: http://goo.gl/KBhqAG
 

2 comments:

  1. அனைத்து செய்திகளும் பயனுள்ளவை..நன்றி

    ReplyDelete
  2. முலிகை மருத்துவம் பார்க்க சான்றிதழ் தேவையா?

    ReplyDelete